Breaking

Thursday, April 2, 2026

6TH TAMIL - ஆசிய ஜோதி



நூல் வெளி

தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.


நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன்
நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு
சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!

வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!

யாரும் விரும்புவது இன்னுயிராம்; - அவர்
என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்
பாடு முழுதும் அறிந்திலிரோ?

நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்
பக்குவ மாவது அறிந்திலீரோ?

காட்டும் கருணை உடையவரே - என்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த
மர்மம் அறியாத மூடரையா!

காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுகன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு
தீய செயலென எண்ணினீரோ?

அம்புவி மீதில்இவ் ஆடுகளும் - உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா?

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லைஐய!

ஆதலால் தீவினை செய்யவேண்டா - ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!
- கவிமணி தேசிக விநாயகனார்

சொல்லும் பொருளும்
  • அஞ்சினர் - பயந்தனர்
  • முற்றும் - முழுவதும்
  • கருணை – இரக்கம்
  • மாரி - மழை
  • வீழும் - விழும்
  • கும்பி - வயிறு
  • ஆகாது - முடியாது
  • நீள்நிலம் - பரந்த உலகம்
  • பூதலம் - பூமி
  • பார் – உலகம்
1. தேசிக விநாயகம் பெற்ற பட்டம்

அ) கவிமாமணி
ஆ) கவிமணி
இ) பாவலரேறு
ஈ) பண்டித சிகாமணி

2. கவிமணி எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) முப்பத்தாறு
ஈ) இருபத்திரண்டு

3. கவிமணி யாருடைய நூலைத் தழுவி ஆசிய ஜோதியை இயற்றினார்.

அ) அர்னால்டு
ஆ) எட்வின் அர்னால்டு
இ) எட்வின் ஜோசப்
ஈ) ஜோசப் அந்தோணி ராஜ்

4. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி

5. நேர்மையான வாழ்வை வாழ்பவர்

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

6. ஒருவர் செய்யக் கூடாதது

அ) நல்வினை
ஆ) தீவினை
இ) பிறவினை
ஈ) தன்வினை

7. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்

8. 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்

9. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்உயிர்
ஆ) இனிய உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்

10. மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மலை எலாம்
ஆ) மலையெலாம்
இ) மலையெல்லாம்
ஈ) மலை எல்லாம்

No comments:

Post a Comment