Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 10, 2021

11ஆம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு வினாத்தாளுக்கான விடைகள் முழுமையும்

பகுதி - அ

பலவுள் தெரிவு வினாக்கள்

1 ) பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அ.முத்துலிங்கம் - யுகத்தின்பாடல்

ஆ) பவணந்திமுனிவர்- நன்னூல்

இ. சு.வில்வரத்தினம் - ஆறாம்திணை

ஈ. இந்திரன் - பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

விடை : ஆ , ஈ 

2 ) கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல்கனிமங்கள் -

 அடிமோனையைத் தெரிவுசெய்க.

அ. கபாடபுரங்களை - காவுகொண்ட

ஆ. காலத்தால் -  கனிமங்கள்

இ கபாடபுரங்களை- காலத்தால்

ஈ. காலத்தால் - சாகாத

விடை : இ ) கபாடபுரங்களை - காலத்தால்

3. பாயிரம் இல்லது --------  அன்றே.

அ. காவியம்

ஆ பனுவல்

இ.பாடல்

ஈ.கவிதை

விடை : ஆ ) பனுவல்

4. ஒருதிரவநிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவுசெய்யப்படுகிற போது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

அ.மொழி என்பதுதிட திரவ நிலையில் இருக்கும்

ஆ. பேச்சுமொழி,எழுத்துமொழியைதிட, திரவப்பொருளாக உருவகப்படுத்தவில்லை.

இ எழுத்துமொழியைவிடபேச்சுமொழி எளிமையானது,

ஈ.பேச்சுமொழியைக்காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.

விடை : இ  ) எழுத்து மொழியை விட பேச்சுமொழி எளிமையானது.


5 ) மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையாக கண்டுபிடிக்க.

அ, அன்னம், கிண்ணம்

ஆ. டமாரம், இங்ஙனம்

இ.ரூபாய், இலட்சாதிபதி

ஈ. றெக்கை, அங்ஙனம்

விடை : அ ) அன்னம் , கிண்ணம்

6 ) கவிஞர் பாப்லோநெரூடா எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அ. பிரான்ஸ்
ஆ) சிலி
இ. அமெரிக்க
ஈ. இத்தாலி

விடை :  ஆ ) சிலி

7 ) தன் இனத்தையும் மொழியையும் பாடாதகவிதை வேரில்லாத மரம்:
கூடில்லாதபறவை என்றுகூறியவர்.

அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ.மல்லார்மே
ஈ. இரசூல்கம்சதேவ்

விடை :  ஈ ) இரசூல்கம்சதேவ்

8 ) நன்னூலின்ஆசிரியர்யார்?

அ .பவணந்திமுனிவர்
ஆ. தொல்காப்பியர்
இ. அமிர்தசாகரர்
ஈ. நம்பி

விடை : அ ) பவணந்தி முனிவர்

9 ) நன்னூல் கூறும் பாயிரத்தின் வகைகள் எத்தனை?

அ.5
ஆ.3
இ .2
ஈ.4

விடை :  இ ) 2

10 ) தவறான இணையைத் தேர்வுசெய்க.

அ. மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
ஆ. தமிழ் +  உணர்வு- மெய் + உயிர்
இ கடல் + அலை - உயிர் +  மெய்
ஈ.மண் +  வளம்- மெய் +  மெய்

விடை : இ ) கடல் + கலை - உயிர் + மெய்

                                பகுதி -ஆ
II ) குறுவினா

1 ) பேச்சுமொழி, எழுத்து மொழியைக்காட்டிலும் உணர்ச்சிவெளிப்பாடுச்சக்திமிக்கது என்?

         எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எழுத்து மொழியில் எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. முகத்திலிருக்கும் வாய் , உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி  வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அதனால்தான் பேச்சுமொழி , எழுத்து மொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கதாக உள்ளது.



2 ) மொழிக்கு முதலில்வரும் எழுத்துக்கள் எத்தனை? அவையாவை?

      மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் - 22 

உயிரெழுத்துகள் 12 ம் மொழிக்கு முதலில் வரும்.

அம்மா , ஆடு , இலை , ஈட்டி , உரல் , ஊதல் , எறும்பு , ஏணி , ஐவர் , ஒட்டகம் , ஓடம் , ஔவை - 12 

மெய்களில் க , ங , ச , ஞ , த , ந , ப , ம , ய  , வ  என்னும் 10 ம் சொல்லின் முதலில் வரும்.

கப்பல் , ஙனம் , சக்கரம் , ஞமலி , தண்ணீர் , நண்பன் , பந்து , மருத்துவம் , யவர் , வரம்.


3 ) மொழிக்கு இறுதியில்வரும்எழுத்துக்கள் எத்தனை? அவையாவை?

       உயிரெழுத்துகள் 12 ம் சொல்லின் இறுதியில் வரும். 

சில ( அ ) , நிலா ( ஆ ) , நரி ( இ ) , தீ ( ஈ ) , மிளகு ( உ ) , பூ ( ஊ ) , சே ( ஏ எ ) , எங்கே ( ஏ )
மழை ( ஐ ) , நொ ( ஒ ) , மலரோ ( ஓ ) , கௌ ( ஔ ) 

மெய்களில் ஞ் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் 11 எழுத்தும் சொல்லின் இறுதியில் வரும் 

சான்று :

மெல்லின மெய் - உரிஞ் , பெண் , வெரிந் , அறம் , மான்

இடையின மெய் - பொய் , பார் , பால் , தெவ் , பாழ் , வாள் 

      பழைய இலக்கண நூலார் குற்றியலுகர எழுத்தையும் சொல்லின் இறுதியில் வருவதாகச் சொல்வர்.


4 )பாயிரம்பற்றிநீஅறியும் கருத்துயாது?

              நூலைப் புரிந்து கொள்ளவும் , அதன் சிறப்பை உணர்ந்து , விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது.


5 ) இனம் மொழிகுறித்த இரசூல்கம்சதேவ் பார்வையைக்குறிப்பிடுக.


        " தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் ; கூடில்லாத பறவை என்று இரசூல்கம்சதேவ் குறிப்பிடுகிறார்.


                பகுதி - இ 

III ) சிறுவினா 

1 ) சு.வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து தமிழ்த்தாய்க்கு எங்கனம் பொருந்துகிறது ?

* தமிழன்னையின் திருவடி மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ளும் திலகம் அவளது புகழ்மணம் பரப்பி அழகு தரும்.

* பிறமொழி நாடாது வழிவழியாகத் தமிழன்னையின் திருவடியை வணங்கியவர்களுக்கும் .

* நிலத்தினை உழுதவர் போன்று தமிழ் மொழியைச் சீர்செய்து பண்படுத்தியவர்களுக்கும் .

* விளைநிலத்தில் நல்வித்தினை விதைத்தவர் போன்று தமிழ் மொழியில் நன்னெறிகளைப் பரப்பியவர்களுக்கும்.

* களையை நீக்கி பயிர் வளர உழைத்து வியர்த்தவர் போன்று தமிழ் மொழியில் , இடர் பல களைந்து உயர்தனிச் செம்மொழியாம் செழித்தோங்கி வளர அரும்பாடு பட்டவர்களுக்கும் , 

*  நிறைமணி போன்ற நல் விளைச்சலான தமிழ் ஞானத்தினை அருளிய தமிழன்னையைக் கவிஞர் சு.வில்வரத்தினம் பல்லாண்டு வாழ வேண்டும் என்ப்பாடுவது வெகுசிறப்பாகப் பொருந்துகிறது.
2 ) நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது ?

*  நூலுக்கு முன் சொல்லப்படுவது முகவுரையில் இடம்பெற வேண்டும்.

*  ஒரு நூலின் உள்ளடக்கம் ஆரம்பிப்பதற்கு முந்தைய பக்கங்களில் நூலின் உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி , நூலாசிரியரே எழுதும் கட்டுரையாக முகவுரை அமைய வேண்டும்.

* நூலாசிரியரின் , நூல் பற்றிய முன்னுரைச் செய்திகளே இடம்பெற வேண்டுமென நன்னூல் குறிப்பிடுகிறது.

3 )  ' என்னுயிர் தமிழ்மொழி என்பேன் ' - என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றை எழுதுக.

*  தமிழ் மொழியை ' உயர்தனிச் செம்மொழி ' என்பர். தமிழ் உயர்ந்த மொழி , தனித்த மொழி , செம்மையான மொழி .

* முத்தமிழ் என்பது இயல் , இசை , நாடகம் ஆகும்.  இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசையும் , நாடகமும் மக்களை நல்வழிப்படுத்தும்.

* வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்ற மூன்று இனங்களிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தைப் பெற்று ' தமிழ் ' என அமைந்திருப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

         இத்தகையச் சிறப்பினை உடைய என் தாய்மொழியாகியாகிய , 

" தமிழ்மொழியை என்னுயிர் என்பேன் " 

" உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே !"

4 ) உயிரீறு , மெய்யீறு , உயிர்முதல் , மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

உயிரீறு :

      நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர்  என்பதால் அது ' உயிரீறு ' எனப்படும்.

சான்று : 

மணி ( ண் + இ ) + மாலை = மணிமாலை 

மெய்யீறு :

          நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது ' மெய்யீறு ' எனப்படும்.

சான்று :  பொன் + வண்டு = பொன்வண்டு

உயிர்முதல் :

              வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது ' உயிர்முதல் ' எனப்படும்.

சான்று : வாழை + இலை 

மெய்ம்முதல் :

            வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய்முதல் எனப்படும்.

சான்று : 

தமிழ் + நிலம் ( ந் + இ = நி ) - தமிழ் நிலம்

5 ) மொழிமுதல் , இறுதி எழுத்துகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகள் தருக.


மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் - 22 

உயிரெழுத்துகள் 12 ம் மொழிக்கு முதலில் வரும்.

அம்மா , ஆடு , இலை , ஈட்டி , உரல் , ஊதல் , எறும்பு , ஏணி , ஐவர் , ஒட்டகம் , ஓடம் , ஔவை - 12 

மெய்களில் க , ங , ச , ஞ , த , ந , ப , ம , ய  , வ  என்னும் 10 ம் சொல்லின் முதலில் வரும்.

கப்பல் , ஙனம் , சக்கரம் , ஞமலி , தண்ணீர் , நண்பன் , பந்து , மருத்துவம் , யவர் , வரம்.


 மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 

       உயிரெழுத்துகள் 12 ம் சொல்லின் இறுதியில் வரும். 

சில ( அ ) , நிலா ( ஆ ) , நரி ( இ ) , தீ ( ஈ ) , மிளகு ( உ ) , பூ ( ஊ ) , சே ( ஏ எ ) , எங்கே ( ஏ )
மழை ( ஐ ) , நொ ( ஒ ) , மலரோ ( ஓ ) , கௌ ( ஔ ) 

மெய்களில் ஞ் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் 11 எழுத்தும் சொல்லின் இறுதியில் வரும் 

சான்று :

மெல்லின மெய் - உரிஞ் , பெண் , வெரிந் , அறம் , மான்

இடையின மெய் - பொய் , பார் , பால் , தெவ் , பாழ் , வாள் 

      பழைய இலக்கண நூலார் குற்றியலுகர எழுத்தையும் சொல்லின் இறுதியில் வருவதாகச் சொல்வர்.


                      பகுதி - ஈ 

IV ) நெடுவினா 

1 ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

முன்னுரை

                கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை, இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்து மொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப்பேசுகிறது இக்கட்டுரை.


பேச்சுமொழி:

i ) எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான்
இலக்கிய வழக்கைக்( நெறியை) கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.

(ii) அதனால்தான் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி
மிக்கதாக உள்ளது.

(iii) பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு. பேச்சு என்பது மொழியில் நீந்துவது.
பேச்சுமொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

(iv ) இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைக்கின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.

( v ) பேச்சுமொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை. அது வேற்றுமொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடனும் இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை
நிகழ்காலத்தவரா இல்லை இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா. பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின்
மேல்தோல் போல் இயங்குகிறது.

எழுத்துமொழி:

i ) ஒரு திரவ நிலையில்தான் விரும்பும் வகையில் தன்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் மொழி,எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைந்துவிடுகிறது.

(ii) எழுத்து மொழி எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. எழுத்து மொழியில் பேச்சைக்கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத்
தானே பேசிக் கொள்கிற பேச்சு.

(iii) பேச்சுமொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல்போல் இயங்கும். ஆனால் எழுத்து மொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல்
போர்த்தி மூடிவிடுகின்றன.

முடிவுரை: 

                     பேச்சுமொழி, எழுத்துமொழி இவைகள் மூலம் எவ்வாறு மொழியை வெளிப்படுத்தலாம் என்பதனை மேற்கண்ட கருத்துக்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். எழுத்துமொழியைவிட
பேச்சுமொழியே மொழியை வெளிப்படுத்தும் சிறந்த கருவியாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

***************    ************   ************

2 ) நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப் பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

முன்னுரை:

“முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்"

                                                                 - நன்னூல்.

                  நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் வாயிலாக அறியும் செய்திகளைப் பற்றி இங்கு காண்போம்.

பாயிரம்-அறிமுகம்:

                     நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொடுத்து நூல் முகப்பில் வைக்கும் முறைப்பற்றிப் பேசுவது பாயிரமாகும்.


பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்:

(1) முகவுரை - நூலுக்கு முன் சொல்லப்படுவது.

(ii) பதிகம் -  ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.

(iii) அணிந்துரை, புனைந்துரை -  நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது.

{iv) நூன்முகம் - நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது.

(v )  புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவைகளை நூலின் புறத்திலே சொல்வது.

( vi ) தந்துரை - நூலில் சொல்லிய பொருளல்லாதவைகளைத் தந்து சொல்வது.

(vii) பாயிரம் 1. பொதுப் பாயிரம், 2. சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

பொதுப் பாயிரம்:

(i) நூலின் இயல்பு
(ii) ஆசிரியர் இயல்பு
(ii) கற்பிக்கும் முறை
(in) மாணவர் இயல்பு
(v) கற்கும்முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்:

(i) நூலாசிரியர் பெயர்

(ii) நூல் பின்பற்றிய வழி

(ii) நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு

(iv) நூலின் பெயர்

(v) தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு.

(vi) நூலில் குறிப்பிடப்படும் கருத்து.

(vii) நூலைக் கேட்போர் (மாணவர் )

(viii )  நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது
சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாகும்.

(ix) நூல் இயற்றப்பட்ட காலம், அது அரங்கேற்றப்பட்ட அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம்
என்னும் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும்
உள்ளனர். இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.

பாயிரத்தின் முக்கியத்துவம்:

(i) ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.

(ii ) மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லா வகை நூல்களுக்கு முன்னர்
அழகு தருவதாக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.

முடிவுரை

நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் பற்றி ஏழு நூற்பாக்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டதைக் கற்று பயன் பெறுவோம்.

**************    ************    *************


விடைத்தயாரிப்பு 

திருமதி.இரா. மனோன்மணி , 
முதுகலைத் தமிழாசிரியை , 
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , 
திண்டுக்கல் .

2 comments: