
மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே!
வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ?
குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினையே!
பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனையே!
காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக்
கலங்கும் ஒருமனிதன்
ஓலமி டக்கரம்
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனையே!
பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்ததுவும்
மூடு பனித்திரை
யூடு புவிக்கொரு
மோகங் கொடுத்ததுவும்
ஆடுங் கிளைமிசை
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்
ஏடு தருங்கதை
யாக முடிந்தன!
இன்று வெறுங்கனவே!
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்
ஏடு தருங்கதை
யாக முடிந்தன!
இன்று வெறுங்கனவே!
சொல்லும் பொருளும்
குந்த - உட்கார, கந்தம் - மணம்
மிசை - மேல் , விசனம் – கவலை
இலக்கணக்குறிப்பு
வெந்து, வெம்பி, எய்தி - வினையெச்சங்கள்
மூடுபனி - வினைத்தொகை,
ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
விரித்த - விரி + த் + த் + அ
விரி - பகுதி த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
குமைந்தனை - குமை + த்(ந்) + த் + அன் + ஐ
குமை - பகுதி
த் - சந்தி. த் - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை, அன் - சாரியை
ஐ - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி




No comments:
Post a Comment