பாடக் குறிப்புகள்
- ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
- சுட்டு எழுத்துகள் மொத்தம் மூன்று. அவை அ, இ, உ என்பனவாகும்.
- சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
- இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை.
- சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
- அவ்வானம், இம்மலை, இந்நூல் இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
- நம் அருகில் உள்ள பொருட்களைச் சுட்ட பயன்படும் எழுத்து அண்மைச் சுட்டு எனப்படும்.
- இ என்பது அண்மைச் சுட்டாகும். அதாவது அருகில் உள்ள பொருளைச் சுட்ட இவ்வெழுத்து பயன்படும். உதாரணமாக, இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு ஆகிய சொற்களைக் காணலாம். இச்சொற்கள் அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
- தூரத்தில் உள்ள பொருட்களைக் குறிக்கப் பயன்படும் சுட்டு சேய்மைச் சுட்டு எனப்படும்.
- அ சேய்மைச் சுட்டெழுத்தாகும். உதாரணமாக, அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் ஆகிய சொற்களைக் கொள்ளலாம். இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
- அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.(எ.கா.) உது, உவன்
- இன்று ‘உ’ என்ற சுட்டெழுத்து பயன்பாட்டில் இல்லை.
- அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
- வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
- வினா எழுத்துகள் மொத்தம் ஐந்து. அவை, எ, யா, ஆ, ஓ, ஏ என்பனவாகும்
- மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் = எ, யா (எங்கு, யாருக்கு)
- மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் = ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
- மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து = ஏ (ஏன், நீதானே)
- வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
- வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.




No comments:
Post a Comment