
குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர் புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின. - அழகிய பெரியவன்
தெரியுமா? மார்ச் 20 - உலகச் சிட்டுக்குருவிகள் நாள்.
நூல்வெளி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர். 'தகப்பன் கொடி’ 'புதினத்திற்காக 2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரின் படைப்புகள்.
சொல்லும் பொருளும்
- புரளும் – ததும்பும்
- கரைகின்ற – கத்துகின்ற, ஒலிக்கின்ற
- சுழித்தோடும் – சுழன்றோடும்
- மார்பு சுரந்த – வளமான
- மறுகியது – வருந்தியது
- ஏதலி – ஏழை, அகதி
இலக்கணக்குறிப்பு
- பார்க்க – வினையெச்சம்
- மழைக்காலம் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- நெடுமரம் – பண்புத்தொகை
- குருவிகளையும் கூடுகளையும் – எண்ணும்மை
- கரைகின்ற – பெயரெச்சம்
- பொய்த்தது, மறுகியது – ஒன்றன் பால் வினைமுற்றுகள்
பகுபத உறுப்பிலக்கணம்
1. பார்க்க = பார் + க் + க் + அ
- பார் – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
2. கரந்த = கர + த்(ந்) + த் + அ
- கர – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
3. பொய்த்தது = பொய் + த் + த் + அ + து
- பொய் – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
4. மறுகியது = மறுகு + இ (ன்) + ய் + து
- மறுகு – பகுதி
- இன் – இறந்தகால இடைநிலை, “ன” கரம் புணர்ந்து கெட்டது
- ய் – உடம்படுமெய் சந்தி
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அழகிய பெரியவன் இயற்பெயர்.
அ) அரவிந்தன்ஆ) ராசேந்திரன்
இ) வில்வரத்தினம்
ஈ) ராசகோபாலன்
2. அழகிய பெரியவன் பிறந்த ஊர் .
அ) யாழ்ப்பாணம்ஆ) சென்னிமலை
இ) அழகர்மலை
ஈ) பேராணம்பட்டு
3. அழகிய பெரியவன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
அ) திருநெல்வேலிஆ) மதுரை
இ) வேலூர்
ஈ) தேனி
4. அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல்.
அ) குறடுஆ) தகப்பன் கொடி
இ) நெறிக்கட்டு
ஈ) வடக்குவீதி
5. அழகிய பெரியவன் எந்த ஆண்டு தமிழக அரசு விருது பெற்றார்.
அ) 2000
ஆ) 2003
இ) 2004
ஈ) 2013
6. அழகிய பெரியவன் படைப்புகளோடு பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) புதினம்
ஆ) நாவல்
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) தகப்பன்கொடி - புதினம்
ஆ) நெறிக்கட்டு - சிறுகதை
இ) அரூப நஞ்சு - நாடகம்
ஈ) பெருகும் வேட்கை - கட்டுரைகள்
8. உலகச் சிட்டுக் குருவிகள் தினம்.
அ) மார்ச் 20
ஆ) பிப்ரவரி 20
இ) ஏப்ரல் 20
ஈ) மே 20
ஆ) பிப்ரவரி 20
இ) ஏப்ரல் 20
ஈ) மே 20
9. “ஏதிலி” என்பதன் பொருள்.
அ) ஏதுமில்லைஆ வறட்சி
இ) அகதி
ஈ) கூடு
10. இயற்கைக்கும் மனிதர்களுக்கும் தொப்புள் கொடியாக அமைவது
அ) மரங்கள்
ஆ) மண்
இ) மழைத்துளி
ஈ) காற்று




No comments:
Post a Comment