Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

11th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 5

பகுபத உறுப்புகள்

கற்றல் விளைவுகள்

பதத்தின் வகைகளை அறியச் செய்தல்.

பகுபதத்தின் உறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

மாணவர்களே! நம் உடலைப் பல்வேறு உறுப்புகளாகப் பிரிப்பது போல தமிழில் உள்ள சொற்களையும் பொருள் தன்மையிலும் உறுப்புகள் தன்மையிலும் பிரிக்கலாம் என்று கூறி
ஆர்வமூட்டுதல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

பதம் என்பதன் வரையறை:

ஓர் எழுத்து தனித்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத்
தந்தால் அது பதம் எனப்படும்.
'எழுத்து தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதமாம்.

அது பகாப்பதம், பகுபதம் என இருபாலாகி இயலும் என்ப"
(நன்னூல்-128)

பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள்தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப்பகுபதம்.
வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பிரித்தால் பொருள் தராத சொற்கள் பகாப்பதம் ஆகும்.

சான்று :

செய்வார்-செய்+வ்+ஆர் பகுபதம்
கண், சால, பிற - பகாபதம்

குறிப்பு:

பெயர்ப்பகுபதச் சொற்களைக் காட்டிலும் வினைப்பகுபதச் சொற்களே வழக்கில் மிகுதி.

செயல்பாடு : 2

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
1. பகுதி (முதல் நிலை) :

சொல்லின் முதலில் நிற்கும் உறுப்பே பகுதி. இது பகாப்பதம் ஆக அமையும். வினைச்சொல்லில் ஏவலாகவும் பெயர்ச்சொல்லில் அறுவகைப் பெயரில் ஏதேனும் ஒன்றாகவும் அமையும்.

சான்று :

வரைந்தான் - வரை பகுதி

பார்த்தான் - பார் - பகுதி

நடிகன்
- நடி பகுதி

2. விகுதி (இறுதி நிலை) :

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.

சான்று:

படித்தான்-படி +த்+த்+ ஆன் (ஆன்- உயர்திணை ஆண்பால் ஒருமை படர்க்கை ஆகியவற்றைக்
காட்டி நிற்கிறது)

வளர்க வளர் + க - வியங்கோள் வினைமுற்று விகுதி

செய்தல் செய் + தல் தொழிற்பெயர் விகுதி

படித்த படி + த் + த் + அ பெயரெச்ச விகுதி

பார்த்து - பார் + த் + த் + உ வினையெச்ச விகுதி

3. இடைநிலை :

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் உறுப்பு.

வினைச்சொற்களிலேயே பெரும்பாலும் இடைநிலை வரும்.

1. நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று

2. எதிர்கால இடைநிலை - ப்வ்

3. இறந்தகால இடைநிலை - த், ட், ற், இன்
சான்று:
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
கிறு - நிகழ்கால இடைநிலை

செயல்பாடு : 3

4. சந்தி:

* பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்

* சந்தி என்பதற்கு புணர்ச்சி என்று பெயர்

*. சந்தியாக வரும் எழுத்துகள் - த், ப்,க்

* உடம்படுமெய்களும் (ய், வ்) சந்தியாக வரும்.

சான்று :

அசைத்தான் - அசை + த் + த் + ஆன்
த் - சந்தி
மயங்கிய
மயங்கு + இன்) + ய் + அ
ய் - உடம்படுமெய் சந்தி

5. சாரியை :

பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும். பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும்
இடையில் வரும். சாரியையாக வருவது அன்.


சான்று:

நடந்தனன் - நட + த்(ந்) + த் + அன் + அன்
அன் - சாரியை

குறிப்பு :

* அன், அள், அர் விகுதிக்கு 'அன்'னே சாரியை

*,ஆன், ஆள், ஆர் விகுதிக்கு 'அன்'சாரியை வராது

6. விகாரம் :

பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவில் ஏற்படும் மாற்றம் விகாரம் ஆகும். இதற்கு தனி உறுப்பு இல்லை.

சான்று :

* நின்றான் - நில் (ன்) +ற் + ஆன் (திரிதல்)

* வணங்கிய - வணங்கு + இன்) + ய் + அ (கெடுதல்)

*கண்டான் - காண் (கண்) + ட் + ஆன் (நெடில் குறிலாகக் குறுகியது)

எழுத்துப்பேறு:

பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல்வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும். சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப் பேறு.

சான்று :

* செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ
த் - எழுத்துப்பேறு

மாணவர் செயல்பாடு

ஒரு மாணவன் கரும்பலகையில் ஒரு சொல்லை எழுத மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக
வந்து பிரித்துக் காட்டி உறுப்புகளைக் கூறச் செய்தல்.

**************    ********   ***********

                           மதிப்பீடு

1. பதம் என்பதன் வரையறை யாது?

       ஓர் எழுத்து தனித்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால்  அது பதம் எனப்படும்.

சான்று :   மா  , மாமரம் 


2. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு . அவை , 

* பகுதி 

* விகுதி 

* இடைநிலை 

* சந்தி

* சாரியை 

* விகாரம் 
  

3. விகுதி என்றால் என்ன?

     சொல்லின் இறுதியில் நின்று திணை , பால் , எண் , இடம் காட்டுவதாக அமைவது விகுதி எனப்படும்.

படித்தான் - படி + த் + த்  + ஆன்

திணை  - உயர்திணை

பால்   -  ஆண்பால் 

எண்  - ஒருமை 

இடம்  - படர்க்கை 


4. பாடுகிறாள் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பாடுகிறாள்  - பாடு + கிறு + ஆள்

பாடு  - பகுதி 

கிறு  - நிகழ்கால இடைநிலை

ஆள்  - பெண்பால் வினைமுற்று விகுதி


5. எழுத்துப்பேறு வரையறு.

எழுத்துப்பேறு:

        பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும். சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப் பேறு.

சான்று :

செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ

த் - எழுத்துப்பேறு

No comments:

Post a Comment