திணை, பால், எண், இடம் பற்றி அறிதல்
கற்றல் விளைவுகள்
* மொழியின் அடிப்படைப் பண்புகளைப் பற்றி அறிதல்.
* திணை, பால், எண், இடம் ஆகியவற்றின் இலக்கணமறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல்.
* உலகில் உள்ள பொருட்களைத் திணை, பால், எண், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கலாம் என்பதை உணர்த்துதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
ஆசிரியர் கரும்பலகையில் 'குமணன் பூங்காவிற்கு சென்றான்' என்ற தொடரை எழுதி இதிலமைந்துள்ள திணை, பால், எண், இடம், யாது? என மாணவர்களிடம் பதில்களை வரவழைத்து ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
தமிழ்மொழியில், பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால் எண், இடம் என்ற நான்கினையும் உணர்த்துகின்றன.
சான்று:
திணை
திணை - ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள்.
* திணையின் வகை இரண்டு. அவை உயர்திணை, அஃறிணை
உயர்திணை:
உயர்ந்த ஒழுக்கமுடைய ஆறறிவுடைய மக்களைக் குறிப்பது உயர்திணை எனப்படும். தேவர், மக்கள், நரகர் உயர்திணையில் அடங்குவர். இவர்கள் மற்ற உயிர்களை விட நன்மை தீமைகளைப் பிரித்தறியும் ஆற்றல் பெற்றவர்கள்.
அஃறிணை :
அல் + திணை = அஃறிணை. உயர்வு அல்லாத ஒழுக்கம் உடையவை என்று பொருள். தேவர், நரகர், மக்கள் அல்லாத மற்றைய உயிருள்ளவை, உயிரில்லாத பொருள்கள் அனைத்தும் அஃறிணை
எனப்படும்.
சான்று:
@ காகம், மேஜை, ஆடு, எறும்பு, வானம், நிலம், யானை
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே"
தொல் (சொல் - 1)
"மக்கள் தேவர் நரகர் உயர்திணை,
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை"
- நன்னூல் (261)
செயல்பாடு :2
பால் :
@ பால் என்பதற்குப் பகுப்பு அல்லது பிரிவு என்பது பொருள்.
@ பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும்.
@ இஃது ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
ஆகியனவாகும்.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் : மூன்று
* ஆண்பால் - உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது.
சான்று : வளவன், செழியன்
* பெண்பால் - உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறிப்பது.
சான்று : யாழினி, அரசி, தலைவி
- பலர்பால் - உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது.
சான்று: பெண்கள், ஆடவர், மக்கள்
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் : இரண்டு
@ ஒன்றன்பால் - அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது.
சான்று: கல், மரம் யானை, புறா, மலை
@ பலவின் பால் - அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது.
சான்று: அவை, வீடுகள், பசுக்கள், மலைகள், மாடுகள்.
செயல்பாடு :3
எண்:
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும். எண் இரண்டு வகைப்படும்.
அவை 1. ஒருமை 2. பன்மை
(i) ஒருமை :
ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும்.
ஒருமைக்குரிய பால்கள் - மூன்று.
* ஆண்பால் - வளவன், மருதன், அவன்
* பெண்பால் - வள்ளி, தலைவி, குழலி
* ஒன்றன்பால் - மாடு, கல், மலை
(ii) பன்மை:
பொருட்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும்.
பன்மைக்குரிய பால்கள் - இரண்டு.
* பலர்பால் - ஆண்கள், பெண்கள், அவர்கள்.
* பலவின்பால் - மாடுகள், பறவைகள், அவை
செயல்பாடு : 4
இடம் :
நாம் உரையாடும் போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும் என்று மூன்று நிலைகள் உள்ளன. இதையே இடம் என்று குறிப்பிடுவர்.
இஃது மூன்று வகைப்படும். அவை,
* தன்மை
* முன்னிலை
* படர்க்கை
1. தன்மை - பேசுபவர் தன்னைக் குறிப்பது.
2. முன்னிலை - முன்னால் இருப்பவரைக் குறிப்பது.
3. படர்க்கை - தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது.
மாணவர் செயல்பாடு
மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரையும் பாடப்பகுதியில் உள்ளஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதிலமைந்துள்ள சொற்றொடருக்கு திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காணச் செய்தல்.
************ ********* **********
மதிப்பீடு
1. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
* ஆண்பால் - உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது.
சான்று : வளவன், செழியன்
* பெண்பால் - உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறிப்பது.
சான்று : யாழினி, அரசி, தலைவி
- பலர்பால் - உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது.
சான்று: பெண்கள், ஆடவர், மக்கள்
2. பன்மைக்குரிய பால் பகுப்புகள் யாவை? சான்று தருக.
பன்மைக்குரிய பால்கள் - இரண்டு.
* பலர்பால் - ஆண்கள், பெண்கள், அவர்கள்.
* பலவின்பால் - மாடுகள், பறவைகள், அவை
3 ) தன்மைப் பன்மைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
தன்மை இடத்தில் பலரைக் குறிப்பது.
சான்று - நாம் படித்தோம்.
No comments:
Post a Comment